

மதுரையில் மாமன்னர்கள் மருதுபாண்டியருக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் மாலை அணிவிப்பதை தடுத்ததை மருது பேரவை மாத இதழ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சேர்வைகார மண்டகப்படியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.T.R.B Rajaa அவர்கள் மாலையிடுவதை தடுத்து நிறுத்திய சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்! நேற்று மாலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த அமைச்சர் T.R.B ராஜா அவர்கள் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கே சார்பு ஆய்வாளராக பணியாற்றும் பாலசுப்பிரமணியன் அவர்கள் இங்கே உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு உள்ளது என்றும் கூறி தடுத்து நிறுத்தியுள்ளார். மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடப்பது சேர்வைக்காரன் மண்டகப்படியில் மருதுபாண்டியர்களின் வாரிசு தாரருக்கு மீனாட்சி அம்மன் கோயில் ஆறாம் நாள் திருவிழாவில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்து வந்ததை இரண்டு ஆண்டுகளாக தர மறுக்கிறார்கள் என்பதும் சிவகங்கை சமஸ்தானம் ராஜா மண்டகப்படி என பெயர் மாற்றி உள்ளார்கள் என்பதே வழக்கின் சாராம்சம். ஆனால் வழக்கின் விசாரணை நடைபெற்று இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கபடாத நிலையில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்பது எத்தகைய நடைமுறை என்பதை இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாடு அமைச்சருக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமக்களை என்னவெல்லாம் சொல்லி இதுவரை மிரட்டி இருப்பார்கள் என்பதை வெகுஜனம் உணர வேண்டும்….இச்செயலுக்கு காரணமான சார்பு ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல் ஆணையர் அவர்களை கேட்டு கொள்கிறோம். அதே போல் இந்து சமய அறநிலையத்துறை உண்மையின் பக்கம் நின்று மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட உரிய அடிப்படை உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.